பிரிக்ஸ் 2026: இந்தியாவின் ராஜதந்திர சாதனைகள் என்ன?


 புதுடெல்லி: உலகளவில் போர் பதற்றம், வர்த்தகப் பூசல்கள் மற்றும் பொருளாதாரத் தடைகள் நீடிக்கும் சூழலில், டெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நிறைவடைந்துள்ளது. மாநாட்டில் இந்தியா பல்வேறு சர்வதேச விவகாரங்களில் தனது நிலைப்பாட்டை வலியுறுத்தியது.


140-க்கும் மேற்பட்ட சர்வதேச விவகாரங்களை உள்ளடக்கிய புதுடெல்லி பிரகடனம் 2026, எந்த எதிர்ப்பும் இன்றி ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. சவுதி அரேபியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், ஒருமித்த முடிவு எட்டப்பட்டது.


பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தில், ஒவ்வொரு நாட்டின் சொந்த கரன்சிகளைப் பயன்படுத்துவதற்கான முடிவும் எடுக்கப்பட்டது. புதிய பிரிக்ஸ் கரன்சியை உருவாக்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.


பாலஸ்தீன மக்களின் உரிமை, காசா போர் நிறுத்தம், மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் உக்ரைன்-ரஷ்யா போர் உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகளில் அமைதியான தீர்வுக்கான இந்தியாவின் நிலைப்பாடு முன்வைக்கப்பட்டது.


எல்லை தாண்டிய பயங்கரவாதம், தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் மற்றும் நிதியுதவி ஆகியவற்றுக்கு எதிரான நிலைப்பாடும் பிரகடனத்தில் இடம்பெற்றது.


ஐநா, ஐநா பாதுகாப்பு கவுன்சில், சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியில் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் பங்கேற்பையும் வாக்களிக்கும் அதிகாரத்தையும் அதிகரிக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியது.


ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் ஷி ஜின்பிங் டெல்லி வந்த நிலையில், அவருடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். சீனா உள்ளிட்ட 11 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி 15 இருதரப்பு ஆலோசனைகளையும் மேற்கொண்டார்.


ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில், மூன்று நாடுகளையும் ஒரே தளத்தில் இணைத்து மாநாட்டை நடத்தி முடித்ததும் முக்கிய முன்னேற்றமாக அமைந்தது.


ஹார்முஸ், செங்கடல் உள்ளிட்ட முக்கிய கடல்வழிகளில் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் ராணுவ மோதல்களுக்கு பதிலாக ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவற்றையும் இந்தியா வலியுறுத்தியது.

Previous Next

نموذج الاتصال