சென்னை: கூட்டுறவு பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மற்றும் தொடர் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட 35 விவசாய சங்கங்கள் பங்கேற்றன.
விவசாயிகளுக்கு தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின்படி, கூட்டுறவு சங்கங்களில் பெறப்பட்ட பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
கடன் தள்ளுபடியில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் அனைத்து விவசாயிகளுக்கும் பயனளிக்கும் வகையில் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் மற்றும் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், கூட்டுறவு பயிர்க் கடன் தள்ளுபடி தொடர்பாக தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர்.
