முன்னாள் மத்திய இணை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான இ.எம். சுதர்சன நாச்சியப்பன் உடல்நலக் குறைவால் 79 வயதில் காலமானார்.
சிவகங்கை அருகே ஏரியூரைச் சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன், 1999 முதல் 2004-ம் ஆண்டு வரை சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்தார். 2004 முதல் 2016-ம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்தார்.
2013 முதல் 2014-ம் ஆண்டு வரை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராகப் பணியாற்றினார்.
சட்டம் பயின்ற இவர், உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. பட்டமும் பெற்றுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸில் பல்வேறு முக்கிய பொறுப்புகளையும் வகித்துள்ளார். 2000-ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத் துறை தலைவராகவும், 2002-ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவராகவும், 2003-ம் ஆண்டு நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி கொறடாவாகவும், 2004-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளராகவும் இருந்தார்.
சிவகங்கையில் உள்ள தனது இல்லத்தில் உடல்நலக் குறைவால் அவர் காலமானார். அவருக்கு தேவகி என்ற மனைவியும், ஜெயசிம்மா, சாணக்கிய மாதவன் ஆகிய இரு மகன்களும், யமுனா நாச்சியார் என்ற மகளும் உள்ளனர்.
அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். அவரது சொந்த ஊரான ஏரியூரில் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
அவரது மறைவையொட்டி தமிழக காங்கிரஸ் சார்பில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதுடன், கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
