தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம்: அபிஜித் திப்கே


 புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அடுத்த 48 மணி நேரத்துக்குள் பதவி விலக வேண்டும். இல்லையெனில் டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே தெரிவித்துள்ளார்.


தேர்தல் ஆணையர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.


இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அபிஜித் திப்கே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 48 மணி நேரத்துக்குள் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.


அவ்வாறு பதவி விலகவில்லையெனில் நாடு முழுவதும் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


இதனிடையே, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் இணை நிறுவனர் சவுரவ் தாஸ், ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், இனி நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.


மேலும், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை நிறுத்தி வைத்து, முந்தைய வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


எஸ்.ஐ.ஆர். தொடர்பான கோப்புகளை உச்ச நீதிமன்றத்தின் தலைமையிலான குழுவின் பாதுகாப்பில் வைக்க வேண்டும் என்றும், தேர்தல் ஆணையர்களை நியமிப்பது தொடர்பான சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் சவுரவ் தாஸ் தெரிவித்தார்.

Previous Next

نموذج الاتصال