சீனா, அமெரிக்கா போட்டியாளர்களாக அல்ல; கூட்டாளிகளாக இருக்க வேண்டும்: ஜி ஜின்பிங்


 வாஷிங்டன்: சீனாவும் அமெரிக்காவும் போட்டியாளர்களாக இல்லாமல், கூட்டாளிகளாக இருக்க வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.


அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் அழைப்பின் பேரில், ஜி ஜின்பிங் 3 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.


அமெரிக்கா சென்றடைந்தபோது சீன மக்கள் சார்பில் அமெரிக்க மக்களுக்கு நல்வாழ்த்துகளை அவர் தெரிவித்தார். இரு நாடுகளும் மிகப்பெரிய நாடுகள் என்றும், இரு நாட்டு மக்களிடையே நீண்டகால நட்புறவு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


சீனா மற்றும் அமெரிக்காவின் நலன்கள் ஒன்றோடொன்று ஆழமாக பின்னிப் பிணைந்துள்ளதாக தெரிவித்த ஜி ஜின்பிங், இரு நாடுகளும் போட்டியாளர்களாக இல்லாமல் கூட்டாளிகளாக செயல்பட வேண்டும் என்றார்.


சீனாவின் தேசிய மறுமலர்ச்சியும், அமெரிக்காவை மீண்டும் வலிமையான நாடாக உருவாக்கும் முயற்சியும் ஒன்றுக்கொன்று இணைந்து செல்ல வேண்டும் என்றும், இதன் மூலம் இரு நாடுகளும் பரஸ்பரம் வெற்றி பெறுவதுடன் உலக மக்களின் நலனையும் மேம்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.


கடந்த மே மாதம் ட்ரம்ப் சீனா சென்றபோது, இரு நாடுகளுக்கும் இடையே ஆக்கப்பூர்வமான மற்றும் ஸ்திரத்தன்மை கொண்ட உறவை உருவாக்க ஒப்புக்கொள்ளப்பட்டதாக ஜி ஜின்பிங் குறிப்பிட்டார்.


ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிலையான உறவை இரு நாடுகளும் உருவாக்க வேண்டும் என்றும், கட்டுப்படுத்தக்கூடிய போட்டி, நிர்வகிக்கக்கூடிய வேறுபாடுகள் மற்றும் அமைதிக்கான உறுதிப்பாடுகள் இடம்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


இரு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் வர்த்தக வரிகள், தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, ராணுவ உறவுகள், மேற்கு ஆசிய மோதல்கள், ரஷ்யா-உக்ரைன் போர், விண்வெளி ஆயுதப் போட்டி மற்றும் தைவானுக்கு அமெரிக்கா வழங்கும் ஆயுதங்கள் உள்ளிட்ட விவகாரங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Next

نموذج الاتصال