சென்னையில் மென்பொருள் நிறுவனங்கள் தொடர்பான இடங்களில் வருமான வரி சோதனை


 சென்னை: வரி ஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து, சென்னையில் கணினி தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் சேவைகளுடன் தொடர்புடைய தனியார் நிறுவனம் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் கணினி உதிரிபாகங்கள் விற்பனை மற்றும் தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு சிறிய நிறுவனங்களுடனும் நிதிப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.


இந்த நிதிப் பரிவர்த்தனைகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், வருவாயை முறையாக கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.


இதையடுத்து நிறுவனத்தின் நிதிநிலை மற்றும் பரிவர்த்தனைகள் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் வரி ஏய்ப்பு தொடர்பான முதற்கட்ட தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிறுவனத்துடன் தொடர்புடைய 5 இடங்களில் அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். ஆழ்வார்பேட்டை, எர்ணாவூர், விருகம்பாக்கம் மற்றும் ராஜமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த நடவடிக்கை நடைபெற்றது.


சோதனையின்போது நிறுவனத்தின் கணினி பதிவுகள், வங்கி பரிவர்த்தனை ஆவணங்கள் மற்றும் நிதி தொடர்பான முக்கிய தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன. கணக்கில் காட்டப்படாத நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் மறைக்கப்பட்ட வருவாய் தொடர்பான விவரங்களையும் அதிகாரிகள் சேகரித்தனர்.


சோதனையில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் பிற தகவல்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Next

نموذج الاتصال