ரூ.78.5 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவான நிதி நிறுவன உரிமையாளர் கைது


 சென்னை: ரூ.78.5 லட்சம் மோசடி தொடர்பான இரு வழக்குகளில் நீண்ட காலமாக தலைமறைவாக இருந்த தனியார் நிதி நிறுவன உரிமையாளர் லதா (47) போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.


சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்த லதா மற்றும் அவரது நிறுவனத்தினர், கடந்த 2008-ம் ஆண்டு திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சமியுல்லாகானிடம் முதலீடு செய்தால் மாதந்தோறும் 4 சதவீத லாபம் வழங்குவதாகக் கூறி ரூ.35 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது.


ஆனால், முதலீடு செய்த தொகையை திருப்பித் தராமல் மோசடி செய்ததாக சமியுல்லாகான் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.


இதையடுத்து, கடந்த 2009-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பின்னர் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.


இதேபோல், அண்ணா சாலையைச் சேர்ந்த இக்பால் ராஜாவிடமும் ரூ.43.5 லட்சம் பெற்று மோசடி செய்ததாக லதா தரப்பினர் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இந்த இரு வழக்குகளிலும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் லதா தலைமறைவானார். அவரை கைது செய்ய கடந்த 2016-ம் ஆண்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.


இந்நிலையில், சிட்லபாக்கம் பகுதியில் பதுங்கியிருந்த லதாவை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Previous Next

نموذج الاتصال