புதுடெல்லி: முக்கிய போட்டித் தேர்வுகளை இரண்டு கட்டங்களாக நடத்த வேண்டும் என்றும், நீட் தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) பரிந்துரை செய்துள்ளது.
தேர்வு சீர்திருத்தங்கள் தொடர்பாக நந்தன் நிலேகணி தலைமையிலான உயர் அதிகாரக் குழுவிடம் ஏபிவிபி தனது பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது.
முக்கிய போட்டித் தேர்வுகளில் முதல் கட்டத்தில் மாணவர்களைத் தேர்வு செய்து பட்டியலிட வேண்டும் என்றும், இரண்டாவது கட்டத்தில் இறுதித் தேர்வு நடத்தி தேர்வை முடிவு செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்றும், இரண்டு தேர்வுகளில் மாணவர் பெற்ற அதிக மதிப்பெண்ணை சேர்க்கைக்கு கருத்தில் கொள்ளலாம் என்றும் ஏபிவிபி தெரிவித்துள்ளது.
கணினி வழித் தேர்வுகளை அதிகரித்தல், வினாத்தாள் பாதுகாப்பை வலுப்படுத்துதல், நாடு முழுவதும் தேர்வு மையங்களுக்கு ஒரே மாதிரியான தரநிலைகளை உருவாக்குதல் ஆகியவையும் பரிந்துரைகளில் இடம்பெற்றுள்ளன.
தேர்வர்களின் அடையாளச் சரிபார்ப்பு மற்றும் தரவுப் பாதுகாப்புக்கு வலுவான நடைமுறைகள் தேவை என்றும், விடைக்குறிப்பு, மதிப்பெண் சமன்படுத்தல் மற்றும் சம மதிப்பெண் பெறுபவர்களைத் தரவரிசைப்படுத்தும் முறைகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், சுயாதீன பாதுகாப்பு மற்றும் தேர்வு நடைமுறை தணிக்கைகள், தேசிய அளவிலான வினா வங்கி, டிஜிட்டல் மதிப்பீடு, ஒருங்கிணைந்த தேர்வு மேலாண்மை அமைப்பு மற்றும் மத்திய தேர்வு கண்காணிப்பு தளம் ஆகியவற்றையும் ஏபிவிபி முன்மொழிந்துள்ளது.
மாணவர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துகளை அறிய புனே, நாக்பூர், போபால், டெல்லி, சண்டிகர் மற்றும் தெற்கு பிஹார் ஆகிய இடங்களில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் அடிப்படையில் இந்தப் பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வுகளின் நடத்துதல், பாதுகாப்பு, வடிவமைப்பு மற்றும் நிர்வாகம் தொடர்பான விரிவான சீர்திருத்தங்களை பரிந்துரைப்பதற்காக இந்த உயர் அதிகாரக் குழு ஜூலை மாதம் அமைக்கப்பட்டது.
