ராமேசுவரம்: இலங்கையின் தலைமன்னார் மற்றும் தமிழ்நாட்டின் ராமேசுவரம் இடையே பயணிகள் கப்பல் சேவையை விரைவில் தொடங்க வேண்டும் என இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய அவர், தலைமன்னார்-ராமேசுவரம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை திட்டம் இரு நாடுகளின் பண்பாட்டு, சமூக மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக அமையும் என தெரிவித்தார்.
இந்த கப்பல் சேவை தொடங்கப்பட்டால் பிராந்திய இணைப்பு மேம்படுவதுடன், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் இரு நாட்டு மக்களிடையேயான தொடர்புகளும் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டார்.
எனவே, இந்தப் பயணிகள் கப்பல் சேவையை விரைவில் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்கான திட்டம் இலங்கை அரசிடம் உள்ளதா என்பது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த இலங்கை துறைமுகங்கள் துறை அமைச்சர் அநுர கருணாதிலக்க, இந்தியா-இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தொடர்பாக பரிசீலனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
மேலும், இந்த சேவை தொடர்பான முழுமையான விவரங்கள் இன்னும் 2 வாரங்களில் இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்தார்.
தலைமன்னார் மற்றும் ராமேசுவரம் இடையேயான கடல் வழிப் பயணிகள் சேவை நடைமுறைக்கு வந்தால், இரு நாடுகளுக்கு இடையிலான மக்கள் தொடர்பு, சுற்றுலா மற்றும் வர்த்தக இணைப்பில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
