சென்னை: விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இணைப்பு பேருந்து சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ.விஜய் தமிழன் பார்த்திபன் ஆய்வு செய்தார்.
சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செப்டம்பர் 11 முதல் 13-ம் தேதி வரை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் வழக்கமாக இயக்கப்படும் 3,297 பேருந்துகளுடன் 2,915 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 6,212 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் 2,48,270 பயணிகள் பயணம் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய பயணிகளுக்காக செப்டம்பர் 14-ம் தேதி வழக்கமான 1,099 பேருந்துகளுடன் 2,240 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 3,339 பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் தானாக ரத்து செய்யப்படாது என தெரிவித்தார்.
டிக்கெட்டை முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே அதை ரத்து செய்ய முடியும் என்றும், பயணிகளின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் ஓடிபியை உள்ளீடு செய்தால் மட்டுமே முன்பதிவு ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்பதிவு டிக்கெட்டுகள் தானாக ரத்தாகின்றன என சிலர் திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டதாகவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடும் பேருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
