ஜம்மு: ஜம்முவுக்குள் ஹெராயின் போதைப்பொருள் கடத்தப்படுவதற்கு பஞ்சாப் வழித்தடமும், வடக்கு காஷ்மீரின் உரி வழித்தடமும் பயன்படுத்தப்படுவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பஞ்சாப்-ஜம்மு வழித்தடம் மற்றும் வடக்கு காஷ்மீரின் உரி வழித்தடம் என இரு தனித்தனி பாதைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 3-ம் தேதி பஞ்சாபில் இருந்து ஜம்மு நோக்கி வந்த பேருந்து, சம்பா புதிய பேருந்து நிலையம் அருகே சோதனை செய்யப்பட்டது. அதில் பயணித்த ஒருவரிடமிருந்து 522 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கையில், செப்டம்பர் 4-ம் தேதி பஞ்சாபின் லூதியானாவில் மேலும் 197 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கில் புல்வாமா மாவட்டம் காகபோராவைச் சேர்ந்த அகிப் பஷீர் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தல் வலையமைப்பில் தொடர்புடைய மேலும் சிலரை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கு முன்னதாக ஆகஸ்ட் 22-ம் தேதி ஜம்மு நகரின் பஞ்ச்தீர்த்தி பகுதியில் வாகனம் ஒன்றிலிருந்து 5.160 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது. இந்தப் போதைப்பொருள் பாகிஸ்தானில் இருந்து உரி பகுதி வழியாக ஜம்மு காஷ்மீருக்குள் கொண்டு வரப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை லடாக் வரை நீடித்த நிலையில், லே பகுதியில் பாரமுல்லாவைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இரு முக்கிய நடவடிக்கைகளிலும் மொத்தம் 6.920 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஜம்மு மற்றும் சம்பா பகுதிகளில் போதைப்பொருள் பாதிப்புக்குள்ளான குடியிருப்புப் பகுதிகளில் நடத்தப்பட்ட இரு தனித்தனி நடவடிக்கைகளில் 438 கிராம் மற்றும் 603 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டது.
போதைப்பொருளின் மூலப்பகுதி முதல் சென்றடைய வேண்டிய இடம் வரை தடத்தைப் பின்தொடர்ந்து, கடத்தல் வலையமைப்பை முழுமையாக கண்டறிந்து அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருளின் ஆதாரம், பெறுநர்கள், நிதியுதவி செய்பவர்கள் மற்றும் தொடர்புடைய பிற நபர்களை அடையாளம் காணும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
