தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் பணிகள் தொடர்பாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பெருங்களத்தூர் பாலம் ரவுண்டானாவில் அசோகத் தூண் அமைத்து அழகுபடுத்தும் பணிக்கு ரூ.27.30 லட்சமும், சிட்லபாக்கம் ரவுண்டானாவில் தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு சிலை அமைத்து அழகுபடுத்தும் பணிக்கு ரூ.18.60 லட்சமும் மதிப்பில் டெண்டர் கோரப்பட்டிருந்தது.
இந்த இரு டெண்டர்களும் இறுதி செய்யப்படுவதற்கு முன்பே பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழா நடத்தப்பட்டதாக அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இந்தப் புகார் தொடர்பாக முதல்வர், தலைமைச் செயலர், நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது.
மேலும், சம்பந்தப்பட்ட இரு டெண்டர்களும் இணையதளத்தில் இன்னும் ‘திறக்கப்பட வேண்டியது’ என்ற நிலையிலேயே இருப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், டெண்டர் விவகாரம் சர்ச்சைக்குள்ளானதைத் தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யாவுக்கு தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
