தமிழகத்தில் மின்வெட்டு இருப்பது உண்மை: திருமாவளவன்


 திருச்சி: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு இருப்பது உண்மை என்றும், இதை மின்சாரத் துறை அமைச்சர் உடனடியாக கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மின்வெட்டு இல்லை என அதிகாரிகள் தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே அமைச்சர் பதில் அளித்து வருவதாக கூறினார்.


எனவே, கள நிலவரம் தொடர்பான சரியான தகவல்களை அதிகாரிகள் அமைச்சருக்கு வழங்க வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார்.


மின்வெட்டு பிரச்சினைக்கு அரசு கூடுதல் கவனம் செலுத்தி, அதைச் சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


மேலும், பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான விவசாயிகளின் அதிருப்தி குறித்து முதல்வர் விஜய்யிடம் எடுத்துரைத்துள்ளதாகவும் திருமாவளவன் கூறினார்.


திமுகவில் முன்னாள் முதல்வர்களான அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் தங்களை விமர்சித்தவர்களுக்கு நாகரிகமான முறையில் பதிலளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.


அதேநேரத்தில், ஆ.ராசா மற்றும் சேகர்பாபு ஆகியோர் பேசிய சில கருத்துகள் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் இருந்ததாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.


திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறியது பதவி ஆசைக்காக என்றும், துரோகப் பட்டம் சூட்டியும் திமுகவினர் விமர்சிப்பது சரியான அணுகுமுறை அல்ல என்றும் அவர் கூறினார். திமுகவின் வெற்றிக்காக விசிக உழைத்துள்ளதாகவும், கட்சி தன்னை சுயவிமர்சனம் செய்ய வேண்டும் என்றே தான் வலியுறுத்தியதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.

Previous Next

نموذج الاتصال