மும்பை ஐஐடி பாம்பேவில் இரண்டாம் ஆண்டு பிடெக் படித்து வந்த 20 வயது மாணவர் சாஹில் வகோடே உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மும்பை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எனர்ஜி சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் துறையில் படித்து வந்த சாஹில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற பருவ இடைத்தேர்வின்போது செல்போன் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தேர்வின்போது வினாத்தாளை சாட்ஜிபிடியில் பதிவேற்றி விடைகளைப் பெற முயன்றதாக ஐஐடி பாம்பே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சம்பவத்துக்குப் பின்னர் மாணவர் தனது விடுதி அறைக்குத் திரும்பிய நிலையில், அதே நாளில் உயிரிழந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து ஐஐடி பாம்பே வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, சாஹிலின் பெற்றோர், அவர் கல்லூரியில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை எதிர்கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக ஒரு பேராசிரியர் தங்கள் மகனிடம் சாதி தொடர்பான அவமதிப்பு கருத்துகளை தெரிவித்ததாகவும், இதுகுறித்து அவர் தங்களிடம் கூறியதாகவும் தந்தை போலீஸில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் பேராசிரியர் சூர்யநாராயண் டூல்லா உள்ளிட்டோர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் பட்டியலினத்தவர், பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், சாஹில் தங்களது எஸ்சி-எஸ்டி பிரிவிடமோ அல்லது நிர்வாகத்திடமோ சாதிப் பாகுபாடு தொடர்பாக எந்தப் புகாரும் அளிக்கவில்லை என்று ஐஐடி பாம்பே நிர்வாகம் தெரிவித்துள்ளது. வளாகத்தில் சாதி அடிப்படையிலான பாகுபாடு நடைபெறவில்லை என்றும் நிர்வாகம் கூறியுள்ளது.
இந்த விவகாரம் தற்போது போலீஸ் விசாரணையில் உள்ளது. விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதாக ஐஐடி பாம்பே தெரிவித்துள்ளது.
