பெண் பைக் ஓட்டுநர்கள் ஹெல்மெட்டுக்குள் தலைமுடியை மறைப்பது ஏன்?


 இந்தியாவில் பெண்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவது அதிகரித்து வரும் நிலையில், சாலைகளில் தாங்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சிக்கல்கள் குறித்து பெண் பைக் ஓட்டுநர்கள் பலர் பகிர்ந்துள்ளனர்.


குருகிராம், போபால் உள்ளிட்ட நகரங்களில் பெண்கள் பைக் ஓட்டும்போது ஆண் ஓட்டுநர்களின் மிரட்டல், துரத்தல், சாலையில் வழிமறித்தல் மற்றும் விபத்துகள் போன்ற சம்பவங்களை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.


போபாலைச் சேர்ந்த 22 வயதான அபிதா ராணா, ஆகஸ்ட் 2-ம் தேதி ஏற்பட்ட சாலை தகராறில் கார் ஓட்டுநர் ஒருவர் தன்னைத் துரத்தியதாக கூறியுள்ளார். பின்னர் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு மன்னிப்புக் கடிதம் பெறப்பட்டதாக தெரிவித்துள்ளார்.


குருகிராமைச் சேர்ந்த ஆயிஷா, பெண் என்பதை பிறர் அறியாமல் இருப்பதற்காக தனது தலைமுடியை முழுமையாக ஹெல்மெட்டுக்குள் வைத்துக்கொள்வதாக கூறியுள்ளார். சாலையில் ஏற்படும் மோதல்கள் தீவிரமடையாமல் தவிர்ப்பதற்காக இத்தகைய முன்னெச்சரிக்கையை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.


இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்த கேண்டிடா லூயிஸும், பைக் ஓட்டும்போது தலைமுடியை ஹெல்மெட்டுக்குள் மறைப்பதாக கூறியுள்ளார். இதன் மூலம் ஆண் ஓட்டுநரைப் போல தோற்றமளிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.


சாலைகளில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் சாலை விதிமீறல்கள், வேகமாக முந்துதல், வழிமறித்தல் உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக இருப்பதாக பெண் ரைடர்கள் கூறுகின்றனர்.


பெண்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு போக்குவரத்து விதிகளை முறையாக அமல்படுத்துவதுடன், சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.

Previous Next

نموذج الاتصال