2026 அக்டோபர் 1-ம் தேதி முதல் மானிய விலையில் வீட்டு உபயோக LPG சிலிண்டரை முன்பதிவு செய்ய ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரம் கட்டாயமாக்கப்படுகிறது.
மானியத்துக்கு தகுதியான வீட்டு LPG நுகர்வோர் இந்த அங்கீகாரத்தை நிறைவு செய்திருக்க வேண்டும். ஏற்கெனவே ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரம் முடித்தவர்கள் மீண்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள தேவையில்லை.
செப்டம்பர் 19-ம் தேதி நிலவரப்படி, சுமார் 27.43 கோடி செயலில் உள்ள வீட்டு LPG நுகர்வோரில் 89.9 சதவீதம் பேர் ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை முடித்துள்ளனர்.
இதுவரை அங்கீகாரம் செய்யாதவர்கள் LPG சிலிண்டர் விநியோகத்தின்போது, தங்களது விநியோகஸ்தர் அலுவலகத்தில் அல்லது சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் அங்கீகாரத்தை நிறைவு செய்யலாம்.
Indane வாடிக்கையாளர்கள் IndianOil ONE செயலியையும், Bharatgas வாடிக்கையாளர்கள் HelloBPCL செயலியையும், HP Gas வாடிக்கையாளர்கள் HP PAY செயலியையும் பயன்படுத்தலாம்.
ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரம் செய்ய விரும்பாதவர்கள் அல்லது அதை முடிக்க முடியாதவர்களும் LPG சிலிண்டரைப் பெறலாம். ஆனால், தங்களது எண்ணெய் நிறுவனத்தின் இணையதளம், மொபைல் செயலி, WhatsApp chatbot அல்லது IVRS மூலம் தங்களது விருப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்பவர்களுக்கு மானியம் இல்லாமல் சந்தை விலையில் 5 கிலோ அல்லது 10 கிலோ சிலிண்டர்கள், இருப்பைப் பொறுத்து வழங்கப்படும்.
மானிய விலையில் வழங்கப்படும் LPG உண்மையான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்வதற்கும், போலியான அல்லது தகுதியற்ற இணைப்புகளை கண்டறிவதற்கும் இந்த அங்கீகாரம் அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 2026-ல் 14.2 கிலோ வீட்டு LPG சிலிண்டருக்கு மறைமுக மானியம் சுமார் ரூ.210 ஆக இருந்தது.
