சென்னை: கல்வி கற்கச் செல்லும் குழந்தைகள் மீதே தீண்டாமைக் கொடுமை நிகழ்த்தப்படும் அளவுக்கு சமூகத்தில் சாதிய மனப்பான்மை நீடிப்பது வேதனையளிப்பதாக திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை அருகே பள்ளிக்குச் சென்ற பழங்குடியின மாணவிகள் அரசு பேருந்திலிருந்து கீழே தள்ளப்பட்டு காயமடைந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பேருந்தில் கூட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறி, நடத்துநரும் ஓட்டுநரும் மாணவிகளை பேருந்திலிருந்து இறக்கிவிட முயன்றதாகவும், அதற்கு மறுத்த மாணவிகள் கீழே தள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
கல்வி கற்கச் செல்லும் குழந்தைகளுக்கே இத்தகைய தீண்டாமைக் கொடுமை நிகழ்வது சமூகத்திற்கு வெட்கக்கேடான நிலை என கனிமொழி தெரிவித்துள்ளார்.
சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, இதற்குக் காரணமானவர்கள் மீது எந்தவித சமரசமும் இல்லாமல் உடனடியாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.
