தமிழக உள் மாவட்டங்களில் வெப்பநிலை 7 டிகிரி வரை உயர வாய்ப்பு


 சென்னை: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் செப்டம்பர் 6-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவி வருகிறது.


இதன் தாக்கத்தால் செப்டம்பர் 3-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


இதர தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.


செப்டம்பர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.


செப்டம்பர் 6 முதல் 8-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகப் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.


உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை செப்டம்பர் 6 வரை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும். கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை வழக்கத்தை ஒட்டியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Previous Next

نموذج الاتصال