சென்னை: இந்துக்களின் மத அடையாளங்கள் பாதுகாக்கப்படுவதை முதல்வர் விஜய் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே 2.5 அடி உயரம் கொண்ட விலைமதிப்பற்ற மரகத முருகர் சிலை காணாமல் போன சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அதேபோல், சிறுவாபுரியில் இருந்து முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் யாத்திரையாக கொண்டு செல்லப்பட இருந்த 108 வெற்றிவேல்கள் அடங்கிய வாகனம், மீஞ்சூர் நெய்தவாயல் அருகே சிலரால் தீயிட்டு கொளுத்தப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
108 கிராமங்களின் வழிபாட்டுக்காக வழங்கப்பட இருந்த வெற்றிவேல்கள் தீயில் எரிந்து கருகியதைப் பார்க்கும்போது மனம் வேதனை அடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு தடை விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் என்றும், இந்துக்களின் நம்பிக்கைகளையும் மதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்துக்கள் மீது அடக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் தொடர்வது ஆபத்தானது என குறிப்பிட்ட நயினார் நாகேந்திரன், சம்பவங்களில் தொடர்புடையவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மதச்சார்பின்மை என்ற பெயரில் சிறுபான்மையின மக்களுக்காக மட்டுமே செயல்படாமல், இந்துக்களின் மத அடையாளங்களும் பாதுகாக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய்யிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
