சென்னை: காவலர் தினத்தை முன்னிட்டு காவல் துறையினருக்கு முதல்வர் விஜய் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
1859-ம் ஆண்டு மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல் துறை தோற்றுவிக்கப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் செப்டம்பர் 6-ம் தேதி காவலர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
சமூகத்தில் அமைதி நிலவவும், சட்டத்தின் ஆட்சி நிலைபெறவும் தன்னலமின்றி பணியாற்றி வரும் காவல் துறையினர் அனைவருக்கும் முதல்வர் விஜய் காவலர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
குற்றங்களைத் தடுப்பது, சட்டம் - ஒழுங்கை பேணுவது மட்டுமின்றி, ஆபத்தான சூழ்நிலைகள் மற்றும் பேரிடர் காலங்களில் மக்களின் உயிர், உடைமை, உரிமைகளைப் பாதுகாப்பதிலும் காவல் துறையினர் துணிவுடன் களப்பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
காவல் துறையினரின் வீரமும் தியாகமும் போற்றத்தக்கது எனவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
காவல் துறையினரின் பணிச்சுமையைக் குறைத்து, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அவர்களின் பணித்திறனை மேம்படுத்துவதற்கும், காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு தேவையான நலத்திட்டங்களை உறுதி செய்வதற்கும் அரசு முன்னுரிமை அளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களும் காவல் துறையுடன் கரம் சேர்த்து, நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்துடன் பயணித்து, அமைதியும் பாதுகாப்பும் நிறைந்த உன்னத தமிழகத்தை உருவாக்க இந்த நாளில் உறுதியேற்க வேண்டும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
