கோயில்களில் செல்போன் தடை திட்டம் தொடருமா? அதிகாரிகள் குழப்பம்


 திருச்சி: தமிழகத்தின் முக்கிய கோயில்களில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட செல்போன் தடைக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், திட்டத்தைத் தொடர்வதா அல்லது கைவிடுவதா என்பது குறித்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.


கோயில்களின் புனிதத்தன்மையை பாதுகாப்பதுடன், சுவாமி தரிசனத்தின்போது பக்தர்களின் கவனம் சிதறாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் 52 முக்கிய கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.


இதற்காக கோயில்களில் செல்போன் பாதுகாப்பு வைப்பறைகள் அமைக்கப்பட்டு, ஒரு செல்போனுக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், செல்போனை ஒப்படைக்கவும், தரிசனம் முடிந்த பிறகு மீண்டும் பெற்றுக்கொள்ளவும் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.


ஏற்கெனவே தரிசனத்துக்காக மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலையில், செல்போனுக்காகவும் தனியாக வரிசையில் நிற்க வேண்டியிருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.


இதையடுத்து முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வருபவர்களுக்கு செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.


மேலும், செல்போன்களை வைப்பறையில் கட்டாயமாக ஒப்படைக்கச் செய்யாமல், தாமாக முன்வந்து வழங்குபவர்களிடம் மட்டும் பெற்றுக்கொள்ளலாம் என்றும், செல்போன்களை அணைத்த நிலையில் கோயிலுக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கலாம் என்றும் கோயில் செயல் அலுவலர்களுக்கு அறநிலையத் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இதன் பின்னர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உள்ளிட்ட சில கோயில்களில் பக்தர்கள் வழக்கம்போல் செல்போன்களுடன் செல்வதாகவும், ஸ்ரீரங்கத்தில் செல்போன் வைப்பறைகள் மூடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செல்போன் தடை திட்டம் கைவிடப்பட்டதா என்பதை அறநிலையத் துறை தெளிவுபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அதை தொடர்வதா அல்லது கைவிடுவதா என்பது குறித்து உயர் அதிகாரிகளிடையே குழப்பம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Next

نموذج الاتصال