அரூர் பகுதியில் கடும் வறட்சி: நிலத்தடி நீர்மட்டம் 14.24 மீட்டராக சரிவு


 அரூர்: தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து, விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வறட்சி நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தருமபுரி மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 942 மி.மீ. ஆகும். இதில் தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்ய வேண்டிய 117 மி.மீ. மழையில் இதுவரை 30 சதவீதம் மட்டுமே பதிவாகியுள்ளது.


மழை குறைந்ததால் அரூர் கோட்டத்தில் பாசனத்துக்கு முக்கிய ஆதாரமாக உள்ள வள்ளிமதுரை அணை, பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள வாணியாறு அணை உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இவற்றின் மூலம் நீர் பெறும் ஏரிகளும் வறண்டு கிடக்கின்றன.


இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் அபாயகரமான அளவுக்கு குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தைவிட இந்த ஆண்டு சராசரி நிலத்தடி நீர்மட்டம் 5.39 மீட்டர் குறைந்து, தற்போது 14.24 மீட்டராக உள்ளது.


பருவமழை இல்லாத நிலையில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி பதிவாகி வருகிறது. நீர் பற்றாக்குறையால் ஆடி மாதத்தில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் விதைப்புப் பணிகளையும் விவசாயிகள் பெரும்பாலான நிலங்களில் மேற்கொள்ளாமல் தரிசாக விட்டுள்ளனர்.


எல்நினோ தாக்கத்தால் பயிரிடப்பட்ட நிலக்கடலை, சோளம், ராகி, சாமை மற்றும் சிறுதானியப் பயிர்களில் 60 சதவீதம் காய்ந்துவிட்டதாக வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மஞ்சள், கரும்பு, வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மலர் சாகுபடியும் கடந்த ஆண்டை விட 40 சதவீதமாக குறைந்துள்ளது.


மேலும், பசுந்தீவனத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கால்நடை வளர்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. வைக்கோல் கட்டு விலை ரூ.300 ஆக உயர்ந்துள்ளதால், கால்நடைகளை குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


தருமபுரி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous Next

نموذج الاتصال