சிஜிபிஎஸ்சி தேர்வு முறைகேடு: முன்னாள் முதல்வரின் ஓஎஸ்டி கைது


 ராய்ப்பூர்: சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் அலுவலகத்தில் சிறப்பு பணியாளராக (OSD) பணியாற்றிய சேதன் போர்கர்ஹியா, சத்தீஸ்கர் பொது சேவை ஆணைய (CGPSC) தேர்வுகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு மற்றும் பணமோசடி தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.


தற்போது பால்ராம்பூர்-ராமானுஜ்கஞ்ச் மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராக பணியாற்றி வந்த சேதன் போர்கர்ஹியா, செப்டம்பர் 11-ம் தேதி பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.


2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் நடைபெற்ற CGPSC மாநில சேவைத் தேர்வுகளில் ஊழல், முறைகேடு மற்றும் தேர்வு நடைமுறையில் தலையீடு செய்யப்பட்டதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.


2024 பிப்ரவரியில் ராய்ப்பூர் பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணையைத் தொடங்கியது. பின்னர் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.


விசாரணையில், உத்தர்ஷ் சந்திரகர், அனில் சந்திரகர் மற்றும் டாக்டர் விகாஷ் சந்திரகர் ஆகியோர் 2021-ம் ஆண்டு CGPSC தேர்வில் கேள்வித்தாள்களை முன்கூட்டியே வழங்கி, தேர்வர்களை தேர்ச்சி பெறச் செய்வதாகக் கூறி ரூ.3 கோடிக்கும் அதிகமாக சட்டவிரோதமாக பணம் பெற்றதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.


ராய்ப்பூரில் உள்ள சித்தி விநாயக் திருமண மண்டபத்தில் தேர்வர்கள் ஒன்று திரட்டப்பட்டு, முதற்கட்டத் தேர்வுக்கு முன்பாக கசிந்த கேள்வித்தாள் வழங்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் பர்னவாபாரா சரணாலய ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டு, முதன்மைத் தேர்வுக்கான கசிந்த கேள்வித்தாள்களின் அடிப்படையில் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.


சேதன் போர்கர்ஹியாவின் வங்கிக் கணக்கில் தொடர்புடைய காலகட்டத்தில் 170 பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம் ரூ.66.64 லட்சம் பணம் செலுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.


செப்டம்பர் 1-ம் தேதி அவரது இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டு, பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் கிடைத்த தகவல்கள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகள் அடிப்படையில் அவரது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நாளில் இருந்து 6 நாட்களுக்கு அவர் அமலாக்கத் துறை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Previous Next

نموذج الاتصال