உத்தராகண்டில் மேலும் 5 மதரஸாக்கள் மீது நடவடிக்கை; எண்ணிக்கை 20 ஆக உயர்வு


 டேராடூன்: உத்தராகண்டில் அங்கீகார விதிமுறைகள் மற்றும் கல்வித் தரநிலைகளை பூர்த்தி செய்யாத மதரஸாக்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக டேராடூன் மற்றும் ஹல்த்வானியில் மேலும் 5 மதரஸாக்கள் மூடப்பட்டுள்ளன அல்லது சீல் வைக்கப்பட்டுள்ளன.


இதன் மூலம் மாநிலம் முழுவதும் மூடப்பட்ட மதரஸாக்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இதில் 17 மதரஸாக்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 3 மதரஸாக்களின் நிர்வாகங்கள் தங்களது செயல்பாடுகளை நிறுத்திவிட்டதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்துள்ளன.


டேராடூனில் 3 மதரஸாக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆசாத் காலனியில் உள்ள மதரஸா ஜாமியா-துஸ்-சலாம் அல்-இஸ்லாமியா சீல் வைக்கப்பட்டது. அதே பகுதியில் உள்ள மதரஸா தார்-இ-அர்கம் மற்றும் மஜ்ராவில் உள்ள மதரஸா தாருல் உலூம் ரஹிமியா ஆகியவற்றின் நிர்வாகங்கள் செயல்பாடுகளை நிறுத்திவிட்டதாக எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளித்துள்ளன.


ஹல்த்வானியில் ஷானி பஜார் சாலையில் உள்ள மதரஸா ஜாமியா நூரியா பர்கதே ஆமினா மற்றும் பன்பூல்புரா இந்திரா நகரில் உள்ள அங்கீகரிக்கப்படாத மதரஸா ஆகியவை தேவையான அங்கீகார ஆவணங்களை சமர்ப்பிக்காததால் சீல் வைக்கப்பட்டன.


கடந்த ஜூலை மாதம் உத்தராகண்ட் அரசு சட்டப்பூர்வ மதரஸா வாரியத்தை ரத்து செய்து, சிறுபான்மை கல்வி நிறுவனங்களை நிர்வகிக்க உத்தராகண்ட் மாநில சிறுபான்மை கல்வி ஆணையத்தை உருவாக்கியது.


புதிய அமைப்பு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயினர்கள் மற்றும் புத்தர்கள் உள்ளிட்ட 6 அறிவிக்கப்பட்ட சிறுபான்மை சமூகங்களின் கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் செயல்படுகிறது.


மாநிலத்தில் எந்த கல்வி நிறுவனமும் நிர்ணயிக்கப்பட்ட விதிகள் மற்றும் அங்கீகாரத் தேவைகளை பூர்த்தி செய்யாமல் செயல்பட அனுமதிக்கப்படாது என்று அரசு தெரிவித்துள்ளது.

Previous Next

نموذج الاتصال