மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: சித்திரை வீதிகளில் பக்தர்களுக்கு தடை


 மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி சித்திரை வீதிகளில் பக்தர்கள் நின்று விழாவைக் காண மாநகர் காவல்துறை தடை விதித்துள்ளது.


குடமுழுக்கு விழா காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்க ‘பாஸ்’ பெற்ற 2,000 பக்தர்கள் மற்றும் 9,000 விஐபிக்கள் என மொத்தம் 11,000 பேர் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர்.


‘பாஸ்’ பெற்ற பக்தர்கள் மட்டும் சித்திரை வீதிகள் வழியாக கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆன்லைனில் விண்ணப்பித்த 14,000 பேரில் குலுக்கல் முறையில் 2,000 பேருக்கு மட்டுமே ‘பாஸ்’ வழங்கப்படுகிறது.


குடமுழுக்கு விழா நேரத்தில் கோபுரத்தில் இருந்து நான்கு திசைகளிலும் ட்ரோன் மூலம் தீர்த்தம் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைக் காண ‘பாஸ்’ இல்லாத பக்தர்கள் சித்திரை வீதிகளில் திரள வாய்ப்புள்ள நிலையில், அங்கு பக்தர்கள் கூடுவதற்கும் காவல்துறை தடை விதித்துள்ளது.


பாஸ் இல்லாத பக்தர்கள் குடமுழுக்கு நடைபெறும் நேரத்தில் கோயிலுக்குள் ஆடி வீதி பகுதியிலும், கோயிலுக்கு வெளியே உள்ள சித்திரை வீதிகளிலும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களுக்கு பதிலாக ஆவணி மூல வீதிகளில் அனுமதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கோயில் கோபுரத்தின் மேல்தளத்தில் அனுமதிக்கப்பட்ட பக்தர்கள் விழா முடிந்து வெளியேறிய பின்னர், சூழ்நிலையைப் பொறுத்து மற்ற பக்தர்கள் சித்திரை வீதிகளில் அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Previous Next

نموذج الاتصال