உடுமலை: உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியால் தென்னை மரங்களை காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி பாசனம் செய்து வருகின்றனர்.
உடுமலை கோட்டத்தில் சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான பகுதிகள் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகளை அடிப்படையாகக் கொண்ட பாசனப் பகுதிகளாக உள்ளன. சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவு பாசன வசதி இல்லாத பகுதிகளில் அமைந்துள்ளது.
விவசாயிகள் எதிர்பார்த்த தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாததுடன், கடும் வெயிலும் நிலவியதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் கிணறுகள் உள்ளிட்ட நீராதாரங்கள் வறண்டு, தென்னை மரங்களுக்கு பாசனம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தீபாலப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், கிணற்று நீரை நம்பி தென்னை சாகுபடி செய்து வந்த நிலையில், மழையின்மையால் கிணறு வறண்டுவிட்டதாக தெரிவித்தார்.
திருமூர்த்தி அணை அருகில் இருந்தாலும், அருகிலுள்ள பிஏபி பிரதான கால்வாயில் இருந்து பாசன வசதி கிடைக்காததால், கடந்த சில மாதங்களாக லாரிகள் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி தென்னை மரங்களுக்கு பாய்ச்ச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
தீபாலப்பட்டி, ஜில்லேபிநாயக்கன்பாளையம், அரசூர், கிருஷ்ணாபுரம், ரெட்டிபாளையம், பொன்னாலம்மன் சோலை, ராவணாபுரம், கரட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இதே நிலை நீடிப்பதாக கூறப்படுகிறது.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலையை அரசு ஆய்வு செய்து, உரிய நிவாரணம் மற்றும் தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.