9 ஆண்டுகளுக்குப் பிறகு சென்சார் வாரியம் சீரமைப்பு


 மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தை 9 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசு மறுசீரமைத்துள்ளது. புதிய வாரியத்தில் 18 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, நடிகர்கள் சுனில் ஷெட்டி, பிரீத்தி ஜிந்தா, பங்கஜ் திரிபாதி, புரோசேன்ஜித் சாட்டர்ஜி, சின்னத்திரை நடிகை ரூபாலி கங்குலி உள்ளிட்டோர் புதிய உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.


இயக்குநர் பிரியதர்ஷன், இசைக்கலைஞர் ரிக்கி கேஜ் உள்ளிட்ட திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் வாரியத்தில் இடம்பெற்றுள்ளனர். முந்தைய வாரியத்தில் இருந்த வாமன் கேந்த்ரே, ரமேஷ் படாங்கே உள்ளிட்ட சிலரும் தொடர்ந்து உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


திரைப்படச் சட்டம் 1952-ன் படி, வாரியத் தலைவரைத் தவிர்த்து 12 முதல் 25 உறுப்பினர்கள் வரை தணிக்கை வாரியத்தில் இடம்பெறலாம்.


கடந்த மே மாதம் பிரசூன் ஜோஷி பிரசார் பாரதி தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சசி சேகர் வேம்பதி மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.


தற்போது நியமிக்கப்பட்டுள்ள 18 உறுப்பினர்களும் 3 ஆண்டுகள் பதவிக் காலத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.


மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் கடைசியாக 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மறுசீரமைக்கப்பட்டது. அதன்பிறகு வாரியத்தில் இருந்த இரு உறுப்பினர்கள் உயிரிழந்த நிலையில், அவர்களுக்குப் பதிலாக புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை.


9 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது 18 உறுப்பினர்களைக் கொண்டு வாரியம் முழுமையாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

Previous Next

نموذج الاتصال