சென்னை: காவலர்களின் பணி நேரத்தை 8 மணி நேரமாக முறைப்படுத்த வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் காவல்துறையினர் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டிய சூழல் இருப்பதாகவும், இதனால் அவர்களின் உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காவலர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பணி நேரம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், 8 மணி நேர பணி என்ற நடைமுறையை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.
காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்புவதன் மூலம் பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காவலர்களின் பணிச்சுமையை குறைத்து, போதிய ஓய்வு கிடைக்கும் வகையில் பணிப்பிரிவுகளை முறைப்படுத்த வேண்டும். இதன் மூலம் காவலர்கள் சிறப்பாக பணியாற்றுவதுடன், அவர்களின் குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடவும் வாய்ப்பு கிடைக்கும் என அவர் கூறியுள்ளார்.
காவல்துறையினரின் நலனை கருத்தில் கொண்டு பணி நேரம், ஓய்வு மற்றும் பணியிடச் சூழல் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
