சென்னை: போதைப் பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக சென்னை, ராமநாதபுரம், நாகை ஆகிய மாவட்டங்களில் 18 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நிசாருதீன் மற்றும் சையத் ஆகியோர் மீது ஏற்கெனவே போதைப் பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
மேலும், இருவரின் வங்கிக் கணக்குகள் மூலம் பணப் பரிமாற்றம் செய்ததாகக் கூறப்படும் நபர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடியைச் சேர்ந்த புல்லட் மகாலிங்கம் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது. மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் அவர் தற்போது மகாராஷ்டிர சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
புல்லட் மகாலிங்கத்தின் வீடு, தோட்டம் மற்றும் அவரது சகோதரர்களின் வீடுகளில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அவரது நண்பர் புதுப்பள்ளி ராஜ் மற்றும் வடக்கு பொய்கைநல்லூரைச் சேர்ந்த உறவினர் சரண்ராஜ் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.
சென்னையில் பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள தொழிலதிபர் அக்பர் என்பவரது இல்லம், திருமங்கலத்தில் ஓய்வுபெற்ற எஸ்பி எதிராஜ் என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வரும் இலங்கைத் தமிழர் ஒருவரின் வீடு, செங்குன்றம் அருகே நல்லூர் ஆற்றந்தாங்கல் பகுதியில் உள்ள கண்ணன் என்பவரது வீடு மற்றும் கொரட்டூர் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
18 இடங்களில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
