4 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.1,000 கடந்த பட்டுக்கூடு விலை


 தருமபுரி: கச்சா பட்டுநூல் விலை உயர்வு மற்றும் பட்டுக்கூடு வரத்து குறைவு காரணமாக, தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் ஒரு கிலோ பட்டுக்கூட்டின் அதிகபட்ச விலை 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரூ.1,000-ஐ கடந்துள்ளது.


தருமபுரி நகரில் 4 ரோடு அருகே செயல்பட்டு வரும் அரசு பட்டுக்கூடு அங்காடியில், ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் முக்கிய அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் விவசாயிகளிடம் இருந்து கொண்டுவரப்படும் பட்டுக்கூடுகள் ஏல முறையில் விற்பனை செய்யப்படுகின்றன.


நேற்று நடைபெற்ற ஏலத்தில் தருமபுரி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த 22 விவசாயிகள் 1,050.650 கிலோ வெண் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.


ஏலத்தில் ஒரு கிலோ பட்டுக்கூட்டுக்கு அதிகபட்சமாக ரூ.1,004, குறைந்தபட்சமாக ரூ.641 மற்றும் சராசரியாக ரூ.827 விலை நிர்ணயிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.8 லட்சத்து 86 ஆயிரத்து 790-க்கு வர்த்தகம் நடைபெற்றது. அரசுக்கு ரூ.13 ஆயிரத்து 30 வருவாய் கிடைத்தது.


எல்-நினோ தாக்கத்தால் வறட்சி நீடிப்பதும், பருவமழை குறைந்து நிலத்தடி நீர்மட்டம் சரிந்ததும் மல்பெரி செடிகளின் வளர்ச்சியை பாதித்துள்ளது. இதன் காரணமாக கடந்த மூன்று வாரங்களாக பட்டுக்கூடு வரத்து குறைந்துள்ளது.


இதனுடன் கச்சா பட்டுநூல் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.5,400 முதல் ரூ.5,800 வரை இருந்த கச்சா பட்டுநூல் விலை, தற்போது ரூ.6,000 முதல் ரூ.6,100 வரை உயர்ந்துள்ளது.


இதற்கு முன்பு 2022 பிப்ரவரியில் ஒரு நாள் மட்டும் பட்டுக்கூடு கிலோ ரூ.1,005-க்கு விற்பனையானது. அதன்பிறகு தற்போது மீண்டும் ரூ.1,000-ஐ கடந்துள்ளதால் பட்டுக்கூடு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Previous Next

نموذج الاتصال