ஜம்மு: பூஞ்ச் மாவட்டத்தில் 2021 முதல் 2024-ம் ஆண்டு வரை நடைபெற்ற பல்வேறு தாக்குதல்களில் 19 ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினர் உயிரிழந்த சம்பவங்களில் தொடர்புடையதாகத் தேடப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி யாசிர், மத்திய காஷ்மீரின் யூஸ்மார்க் பகுதியில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பூஞ்ச் மாவட்டத்தின் பிர் பஞ்சால் மலைத்தொடர் பகுதியில் கடந்த 3 முதல் 4 மாதங்களாக போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். மனித உளவுத்தகவல் மற்றும் தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில் யாசிர் மற்றும் அவரது கூட்டாளியான ஆசிப் ஃபவுஜி என்ற மூசா ஆகியோர் தேடப்பட்டு வந்தனர்.
பாதுகாப்புப் படையினரின் தொடர் நடவடிக்கையால் இருவரும் பூஞ்சின் லோரன் அடர்ந்த வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். ஆகஸ்ட் 27-ம் தேதி தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் அவர்கள் அப்பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டது.
2021 அக்டோபரில் சாம்ரேர் மற்றும் பட்டா துரியான் பகுதிகளில் 9 வீரர்கள் கொல்லப்பட்ட தாக்குதல், 2023 ஏப்ரலில் பட்டா துரியானில் 5 வீரர்கள் கொல்லப்பட்ட தாக்குதல், 2023 டிசம்பரில் தேஹ்ரா கி காலியில் 4 வீரர்கள் கொல்லப்பட்ட தாக்குதல் ஆகியவற்றிலும் இருவருக்கும் தொடர்பு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 2024 மே மாதம் தனா ஷா சித்தார் பகுதியில் ஒரு விமானப்படை வீரர் கொல்லப்பட்ட தாக்குதல் மற்றும் 2024 அக்டோபரில் பாரமுல்லாவின் பூட்டா பத்ரி பகுதியில் 2 ராணுவ வீரர்கள் மற்றும் 2 பொதுமக்கள் கொல்லப்பட்ட தாக்குதல்களிலும் அவர்கள் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூஸ்மார்க் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் யாசிர் கொல்லப்பட்ட நிலையில், அவரது கூட்டாளி மூசாவைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
