புதுடெல்லி: டெல்லி, சென்னை, போபால் மற்றும் கொல்கத்தா ஆகிய நான்கு நகரங்களில் பேரியம் அளவு குறைக்கப்பட்ட நவீன பட்டாசுகளை வெடித்து நேரடி சோதனை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குடன், பட்டாசு ஆலை உரிமங்கள் மற்றும் விற்பனை உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.
விசாரணையின்போது, பட்டாசு தயாரிப்பு, விற்பனை மற்றும் வெடிப்பது தொடர்பாக சில தளர்வுகளை வழங்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
பேரியம் அளவு குறைக்கப்பட்ட பட்டாசுகளுக்கான ஆய்வக சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், நேரடி வெடிப்புச் சோதனை நடத்த சம்பந்தப்பட்ட கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், 125 டெசிபலுக்கும் குறைவான ஒலி அளவு கொண்ட பட்டாசுகளை அனுமதிக்கலாம் என்ற பரிந்துரையும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து, டெல்லி, சென்னை, போபால் மற்றும் கொல்கத்தா நகரங்களில் பேரியம் குறைக்கப்பட்ட நவீன பட்டாசுகளை வெடித்து சோதனை நடத்த நீதிபதிகள் அமர்வு அனுமதி அளித்தது.
இந்த சோதனைகளின் முடிவுகள் தொடர்பான அறிக்கையை மூன்று வாரங்களுக்குள் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
