மனநலம் பாதித்த இளம்பெண்ணை குடும்பத்துடன் சேர்த்த பெண் காவலர்கள்


 சென்னை: பெரியமேடு பகுதியில் மனநலம் பாதித்த நிலையில் சுற்றித் திரிந்த தூத்துக்குடியைச் சேர்ந்த இளம்பெண்ணை பாதுகாப்பாக மீட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்த பெண் போக்குவரத்து காவலர்களை காவல் ஆணையர் அமல்ராஜ் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.


பெரியமேடு போக்குவரத்து காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றும் கனகவள்ளி, கடந்த 25-ம் தேதி காலை டெமலோஸ் பாயின்டில் பணியில் இருந்தார். அருகிலுள்ள போக்குவரத்து பாயின்டுகளில் பெண் காவலர்கள் கோசலாதேவி, ராஜபிரியா மற்றும் வினோதினி ஆகியோரும் பணியாற்றி வந்தனர்.


அப்போது, உடைகள் கலைந்த நிலையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அப்பகுதியில் சுற்றித் திரிந்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் காணப்பட்டதால், காவலர் கனகவள்ளி அவரை அழைத்து அன்புடன் பேசியுள்ளார்.


அந்தப் பெண் ஆங்கிலத்தில் பேசினாலும் தெளிவாக பதில் அளிக்க முடியாத நிலையில் இருந்தார். காவலர்கள் அவருக்கு உடை அணிவித்து பாதுகாப்பாக வைத்துக்கொண்டு தொடர்ந்து விசாரித்தனர்.


அப்போது, அவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்பதும், அவரது தந்தையின் செல்போன் எண்ணும் தெரியவந்தது. இதையடுத்து அவரது தந்தையை தொடர்புகொண்டு, மகள் சென்னையில் இருப்பது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.


மகளை காணாமல் தவித்து வந்த அவரது தந்தை மறுநாள் சென்னை வந்து பெண் காவலர்களை சந்தித்தார். உரிய விசாரணைக்குப் பிறகு இளம்பெண் அவரது தந்தையிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார்.


மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல், இரண்டு நாட்களுக்கு முன்பு சொந்த ஊரிலிருந்து தனியாக ரயிலில் சென்னை வந்தது விசாரணையில் தெரியவந்தது.


இந்த மனிதநேய செயலுக்காக பெண் காவலர்களை காவல் ஆணையர் அமல்ராஜ் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

Previous Next

نموذج الاتصال