காங். முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தல் தடை


 சென்னை: காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா அடுத்த 3 ஆண்டுகள் மக்களவை அல்லது சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


2021-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்ட அசன் மவுலானா வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் ரூ.17.03 லட்சம் செலவு செய்ததாக தேர்தல் ஆணையத்திடம் அவர் கணக்கு தாக்கல் செய்திருந்தார்.


அவரது தேர்தல் செலவுக் கணக்கில் முறைகேடு இருப்பதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் முன்னணி நாளிதழ்களுக்கு வழங்கப்பட்ட விளம்பரங்களுக்கான ரூ.32 லட்சம் வரையிலான செலவு கணக்கில் காட்டப்படவில்லை என தெரியவந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


அந்தத் தேர்தலில் வேட்பாளர் ஒருவர் அதிகபட்சமாக ரூ.30.80 லட்சம் வரை செலவு செய்ய அனுமதி இருந்த நிலையில், விளம்பரச் செலவுகள் தொடர்பாக அசன் மவுலானாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.


இதற்கு பதிலளித்த அசன் மவுலானா, அந்த விளம்பரங்கள் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்டதால் அவற்றுக்கான செலவுக்கு தான் பொறுப்பல்ல என்று விளக்கம் அளித்தார்.


ஆனால், விளம்பரங்களில் வேட்பாளரின் பெயர் மற்றும் புகைப்படம் இடம்பெற்றதுடன், குறிப்பிட்ட தொகுதி மக்களிடம் அவருக்கு வாக்களிக்குமாறு நேரடியாகக் கோரப்பட்டிருந்ததால், அந்தச் செலவு வேட்பாளரின் தேர்தல் செலவாகக் கருதப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.


மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் அசன் மவுலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை 2026 ஆகஸ்ட் 19-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.


இந்த நடவடிக்கை பழிவாங்கும் அரசியல் என்றும், இதை எதிர்த்து நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் அசன் மவுலானா தெரிவித்துள்ளார்.

Previous Next

نموذج الاتصال