கோவில்பட்டியில் கடும் வெப்பம்: கருகும் வேம்பு, பனை மரங்கள்


 கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாரத்தில் கடந்த 6 மாதங்களாக மழை பெய்யாததால் நிலங்கள் இறுகி, கடும் வறட்சி நிலவி வருகிறது. எல்நினோ தாக்கத்தால் வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் வேம்பு, பனை மரங்களும் கருகி வருகின்றன.


தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர், கயத்தாறு, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 வட்டாரங்களில் பெரும்பாலான கிராமங்களில் மானாவாரி விவசாயம் நடைபெற்று வருகிறது.


கடந்த பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு மழை பெய்யவில்லை. ஏப்ரல், மே மாதங்களிலும் கோடை மழை இல்லாததால் விவசாயிகள் கோடை உழவை மேற்கொள்ள முடியவில்லை.


வழக்கமாக ஆவணி மாதம் இரண்டாவது வாரத்தில் மக்காச்சோளம் உள்ளிட்ட விதைகளை விதைப்பார்கள். முதல் பருவமழைக்குப் பிறகு உளுந்து, பாசி, கம்பு, பருத்தி, வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி, சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்களின் சாகுபடி தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு இதுவரை விவசாயப் பணிகள் தொடங்கவில்லை.


கடந்த 3 மாதங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பனை மரங்களின் குருத்துகள்கூட காய்ந்து வருகின்றன. நீர்நிலைகள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டமும் மிகவும் குறைந்துள்ளது. கால்நடைகளுக்கு குடிநீரும், மேய்ச்சல் வசதியும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.


நிலங்கள் பாழ்படாமல் இருக்க சில பகுதிகளில் விவசாயிகள் இறுகிய நிலத்தில் டிராக்டர் மூலம் உழவு செய்து வருகின்றனர்.


பருவமழை தாமதமாகுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசு உதவ வேண்டும் என்றும், கிராமப்புறங்களில் குடிநீருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், மாற்றுப்பயிர் சாகுபடி குறித்து வேளாண்மைத் துறை வழிகாட்ட வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous Next

نموذج الاتصال