புதுடெல்லி: எதிர்வரும் காலங்களிலும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு முக்கியமான பாதுகாப்பு அச்சுறுத்தலாகவும், சாத்தியமான அச்சுறுத்தலாகவும் தொடரும் என்று முன்னாள் முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்புக்கு தீர்க்கப்படாத எல்லைப் பிரச்சினைகள், எல்லை தாண்டிய பயங்கரவாதம், அரசு சாரா அமைப்புகள், விண்வெளி, இணையவழி மற்றும் கடல்சார் துறைகளில் அதிகரித்து வரும் போட்டி மற்றும் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.
‘இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற ஜி.பி. பந்த் நினைவு சொற்பொழிவில் அனில் சவுகான் பேசினார்.
பாகிஸ்தான் மற்ற நாடுகளுடன் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்கள் அந்நாட்டுக்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்தி, மீண்டும் தவறான கணிப்புகளை மேற்கொள்ளும் சூழலை உருவாக்கக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.
அணு ஆயுதங்கள் இருப்பது உயர் மட்டத்தில் ஒரு வகையான நிலைத்தன்மையை உருவாக்கியுள்ளதாகவும், அதே நேரத்தில் கீழ்மட்டத்தில் நிலையற்ற தன்மைக்கு வழிவகுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பயங்கரவாதம் மற்றும் எல்லை தாண்டிய நடவடிக்கைகள் மூலம் பாகிஸ்தான் மறைமுகப் போரை தொடர்ந்து முன்னெடுக்க முயற்சிப்பதாகவும் அனில் சவுகான் கூறினார்.
ஊரி, பாலகோட் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ஆகிய மூன்று எல்லை தாண்டிய நடவடிக்கைகள் மூலம் இந்தியா தடுப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளதாகவும், பயங்கரவாதம் மற்றும் மறைமுகப் போருக்கு எதிராக நம்பகமான தடுப்பாற்றலை உருவாக்குவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தியா-சீனா உறவுகள் எல்லைப் பிரச்சினைகளால் மட்டுமே கட்டுப்படுத்தப்படக் கூடாது என்றும் அவர் கூறினார். இரு நாடுகளும் ஆசியாவின் முக்கிய சக்திகள் என்பதால், அவற்றின் ஒரே நேரத்தில் ஏற்படும் வளர்ச்சியை இரு நாடுகளும் எவ்வாறு நிர்வகிக்கின்றன என்பது ஆசியாவின் எதிர்காலத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அனில் சவுகான் தெரிவித்தார்.
