ஆப்கானிஸ்தானில் ட்ரோன்கள் ஏவப்பட்டதாகக் கூறப்படும் 10 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அந்நாட்டு தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள கோஹாட் நகரின் பழைய காவல் துறை தலைமையகத்தில் செப்டம்பர் 18-ம் தேதி நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதன் பின்னர், செப்டம்பர் 21-ம் தேதி ஆப்கானிஸ்தானின் குனார் மற்றும் பக்திகா மாகாணங்களில் பாகிஸ்தான் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக ஆப்கானிஸ்தான் குற்றம்சாட்டியது. இதில் 3 பேர் கொல்லப்பட்டதுடன், வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து செப்டம்பர் 23-ம் தேதி ஆப்கானிஸ்தானில் இருந்து 8 ட்ரோன்கள் ஏவப்பட்டு பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். அவற்றின் எல்லை தாண்டிய ஊடுருவல் தடுக்கப்பட்டதாகவும் கூறினர்.
இதற்கு பதிலடியாக, ஆப்கானிஸ்தானில் ட்ரோன்கள் ஏவப்பட்ட மற்றும் அவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 இடங்களை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இத்தாக்குதல்கள் தங்கள் இறையாண்மையைப் பாதுகாத்துக் கொள்ளும் தற்காப்பு உரிமையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவது கடுமையான அத்துமீறல் என்றும், இதற்கு தகுந்த பதிலடி அளிக்கப்படும் என்றும் தலிபான் அரசு செய்தித் தொடர்பாளர் ஸபிஹுல்லா முஜாஹித் எச்சரித்துள்ளார்.
