புதுடெல்லி: கோவாவில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது 97 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, ECINet மென்பொருளை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வலியுறுத்தியுள்ளார்.
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட 97 பேரும் உரிய ஆவணங்களுடன் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, அவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க மாநில தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்தனர்.
ஆனால், தேர்தல் ஆணையத்தின் ECINet மென்பொருள் கட்டமைப்பில் ஏற்கெனவே நீக்கப்பட்ட வாக்காளர் பெயர்களை மாநில அதிகாரிகளால் மீண்டும் பட்டியலில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவா தேர்தல் ஆணையம் சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் 8 முறை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும், 97 பேரின் பெயர்களும் மீண்டும் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார். கோவா வாக்காளர் பட்டியலில் 97 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டதற்கான தெளிவான விளக்கத்தை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்றும், எழுப்பப்பட்ட 14 கேள்விகளுக்கும் வெளிப்படையான பதில் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பாதிப்புகளை ஏற்படுத்தியதாக கூறப்படும் ECINet மென்பொருளை நீக்குவதுடன், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய வேண்டும் என்றும் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
