சத்தீஸ்கர் மாநிலம் மகாசமுந்த் மாவட்டத்தில், பான் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் கதா தயாரிக்க பயன்படும் கைர் மரங்களை கடத்தியதாகக் கூறப்படும் ரூ.120 கோடி மதிப்பிலான வலையமைப்பை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
ஒடிசாவில் இருந்து இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள கதா தயாரிப்பு நிறுவனங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட 23,350 கிலோ கைர் மரத்தை ஜூன் 17-ம் தேதி போலீஸார் பறிமுதல் செய்ததைத் தொடர்ந்து விசாரணை விரிவடைந்தது.
அந்த மரங்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட வனத்துறை அனுமதி ஆவணம் போலியானது என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட சோதனைகளில் சத்தீஸ்கர், ஹரியாணா, ஒடிசா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50 டனுக்கும் அதிகமான கைர் மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 7-ம் தேதி சத்தீஸ்கரைச் சேர்ந்த மணீஷ் அகர்வால் என்பவரின் இடத்தில் இருந்து ரூ.81 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள கதா தயாரிப்பு நிறுவனங்களுடன் தொடர்புடைய தொழிலதிபர்களுடன் இணைந்து 8 போலி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டதாக போலீஸார் கூறுகின்றனர். இந்நிறுவனங்கள் மூலம் இரண்டு ஆண்டுகளில் ரூ.120 கோடி மதிப்பிலான போலி ரசீதுகள் உருவாக்கப்பட்டதாகவும், பணப் பரிமாற்றத்துக்கு 10-க்கும் மேற்பட்ட இடைத்தரகர் வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒடிசாவின் பாலாங்கிர், பர்கர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், சத்தீஸ்கரின் ராய்கர்-ஜஷ்பூர் பகுதிகளிலும் மரங்கள் வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
அங்கிருந்து மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் அல்லது ஜார்க்கண்ட் வழியாக ஹரியாணாவை கடந்து இமாச்சலப் பிரதேசத்துக்கு மரங்கள் கொண்டு செல்லப்பட்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடத்தல் தொடர்பாக ஜூலை 9-ம் தேதி மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல், குற்றச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
