காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ள நிலையில், வெளிநாடுகள் அனுப்ப முன்வந்த தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களை நேபாள அரசு நிராகரித்துள்ளது.
இந்தியா, அமெரிக்கா, சீனா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் மீட்புக் குழுக்களை அனுப்ப முன்வந்தன. இருப்பினும், நேபாள ராணுவம், காவல்துறை மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் திறன் இருப்பதாகக் கருதி வெளிநாட்டு மீட்புக் குழுக்களின் உதவி தற்போதைக்கு தேவையில்லை என அரசு முடிவு செய்துள்ளது.
இந்த முடிவுக்கு கடந்த கால பேரிடர் அனுபவங்களும் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 9,000 பேர் உயிரிழந்தனர். அப்போது பல நாடுகளின் மீட்புக் குழுக்கள் மற்றும் ஏராளமான விமானங்கள், ஹெலிகாப்டர்கள் நேபாளத்துக்கு வந்தன.
இதனால் மீட்புக் குழுக்களை ஒருங்கிணைப்பதிலும், அவர்களின் செயல்பாடுகளை நிர்வகிப்பதிலும் கடும் சிரமம் ஏற்பட்டது. விமான நிலையங்கள், சாலைகள் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள் ஏற்கெனவே அழுத்தத்தில் இருந்ததால் மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பது மேலும் சிக்கலானது.
இதுபோன்ற அனுபவங்களை கருத்தில் கொண்டு, இந்த முறை வெளிநாட்டு மீட்புக் குழுக்களை அனுமதிக்க வேண்டாம் என நேபாளம் முடிவு செய்துள்ளது.
அதேநேரத்தில், நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதியுதவியை நேபாளம் வரவேற்று வருகிறது. மீட்பு நடவடிக்கைகளுக்குப் பின்னர் மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்புப் பணிகளுக்கு கூடுதல் சர்வதேச உதவி தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
