டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் புதிய சிகிச்சை மையத்தை திறந்தார் முதல்வர் விஜய்


 சென்னை: ஆழ்வார்பேட்டையில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள உலகின் முதல் விழிப்படல நுண் துளை சீரமைப்பு சிகிச்சைக்கான பிரத்யேக மையத்தை தமிழக முதல்வர் விஜய் திறந்து வைத்து பார்வையிட்டார்.


‘பின்ஹோல் பியூபிலோபிளாஸ்டி - பிபிபி’ என்ற பெயரில் செயல்படும் இந்த சிகிச்சை மையம், விழி வெண்படல பாதிப்பால் பார்வைத்திறன் குறைவடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது.


மையத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய், இந்த சிகிச்சையை பெற்றவர்களிடம் அவர்களின் பார்வைத்திறன் குறித்து கேட்டறிந்தார். விழி வெண்படலத்தை மாற்றாமல் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் சிகிச்சை அளிக்கும் முறை குறித்தும் அவருக்கு விளக்கப்பட்டது.


விழி வெண்படல பாதிப்புகளுக்கு இதுவரை மாற்று அறுவை சிகிச்சை முக்கிய தீர்வாக இருந்து வந்த நிலையில், இந்த புதிய முறையில் சேதமடைந்த பகுதிகளை சீரமைத்து பார்வைத்திறனை மேம்படுத்தும் சிகிச்சை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சிகிச்சை முறையில் கண் பாவையின் அளவு குறிப்பிட்ட அளவுக்கு சுருக்கப்பட்டு, ஒளிப் பிறழ்வு பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


விழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான கொடையாளர்கள் போதிய அளவில் கிடைக்காத சூழலில், இந்த புதிய சிகிச்சை முறை பல நோயாளிகளுக்கு மாற்று வாய்ப்பாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Next

نموذج الاتصال