கைக்குழந்தையுடன் கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்ற பெண் கைது

சென்னை: கைக்குழந்தையுடன் தனியார் பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த பெண்ணை சென்னை சி.எம்.பி.டி. காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் கஞ்சா கடத்தி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.


அப்போது, கோயம்பேடு ஆர்ச் அருகே தனியார் பேருந்தில் இருந்து கைக்குழந்தையுடன் இறங்கிய பெண்ணின் நடவடிக்கையில் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து சோதனை செய்தபோது, உடைமைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.


விசாரணையில், அந்த பெண் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கங்காதேவி (38) என்பது தெரியவந்தது. டெல்லியில் பிரீத்தி என்பவரது வீட்டில் அவர் வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.


பிரீத்தி அளித்த தகவலின்படி ஒடிசா சென்று கஞ்சாவை வாங்கிய கங்காதேவி, பின்னர் செங்குன்றம் வழியாக கோயம்பேடு வந்துள்ளார். அங்கிருந்து கஞ்சாவை கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்றபோது போலீஸாரிடம் சிக்கினார்.


இதையடுத்து கங்காதேவியை கைது செய்த போலீஸார், கஞ்சாவை வழங்கியவர்கள் மற்றும் கடத்தலின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Previous Next

نموذج الاتصال