புதுடெல்லி: பிரதமரின் ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்கு திட்டம் நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆகஸ்ட் 28-ம் தேதி ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்கு திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 59.09 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்குகளில் ரூ.3.17 லட்சம் கோடி வைப்புத் தொகை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜன் தன் யோஜனா கணக்கு வைத்திருப்பவர்களில் 56 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். மேலும், மொத்த வங்கிக் கணக்குகளில் 78 சதவீதம் கிராமப்புறங்களில் உள்ளன.
இந்தக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் வரையிலான விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. அவசரத் தேவைகளுக்காக ரூ.10,000 வரை மிகைப்பற்று வசதியும் அளிக்கப்படுகிறது.
மேலும், வாடிக்கையாளர்களுக்கு 41.29 கோடிக்கும் அதிகமான ரூபே அட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
திட்டத்தின் 12-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவில், ஜன் தன் யோஜனா திட்டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதுடன், ஈடு இணையற்ற தாக்கத்தையும் உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
