சென்னை: அரசுக்குச் சொந்தமான சிட்கோ நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா மீது சென்னை சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு சிட்கோ சார்பில் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த நிலத்தை, திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை மாநகர மேயராக இருந்தபோது தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றியதாக சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மா.சுப்பிரமணியன் மீது மோசடி, கூட்டுச் சதி மற்றும் ஊழல் தடுப்பு உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. குற்றச்சாட்டு பதிவு செய்வது தொடர்பான நடவடிக்கை தாமதமாகி வந்த நிலையில், மா.சுப்பிரமணியன் தொடர்ந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு மே மாதம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.சஞ்சய் பாபா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மா.சுப்பிரமணியன் மற்றும் காஞ்சனா நேரில் ஆஜராகினர். இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசித்துக் கூறினார்.
குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த இருவரும், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், அவை முற்றிலும் தவறானவை என தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்த நீதிபதி, வழக்கின் சாட்சி விசாரணையை ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.