புதுடெல்லி: கடன் வாங்கியவர்களை மிரட்டுதல், திட்டுதல், சமூக வலைதளங்களில் தொல்லை அளித்தல் உள்ளிட்ட செயல்களில் வங்கி வசூல் முகவர்கள் ஈடுபடக் கூடாது என ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று, தவணைகளை செலுத்தத் தவறும் வாடிக்கையாளர்களிடம் கடன் வசூல் முகவர்கள் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதைத் தடுக்கும் நோக்கில் இந்த விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
கடன் நிலுவையை வசூலிப்பது வங்கிகளின் உரிமையாக இருந்தாலும், அதற்காக வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட சுதந்திரம், கண்ணியம் மற்றும் தனியுரிமை பாதிக்கப்படக் கூடாது என விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்கள் 2027 ஜனவரி 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வர உள்ளன.
இதன்படி, வசூல் முகவர்கள் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்ளவோ அல்லது நேரில் சந்திக்கவோ முடியும்.
தெரியாத அல்லது புதிய செல்போன் எண்களில் இருந்து அழைப்பது, அச்சுறுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்துவது, வாடிக்கையாளர்களைத் திட்டுவது அல்லது மிரட்டுவது ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தொல்லை கொடுப்பதும், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களைத் தொடர்புகொண்டு கடன் வசூல் தொடர்பாக தொந்தரவு செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
வசூல் பணியில் ஈடுபடும் முகவர்கள் தங்களது அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.