E20, சாதாரண பெட்ரோல் தேர்வு உரிமை வழங்க வேண்டும்: பிரதமருக்கு கேஜ்ரிவால் கடிதம்

 

எத்தனால் கலந்த மற்றும் கலக்காத பெட்ரோலில் நுகர்வோர் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தல்

செய்தி

புதுடெல்லி: எத்தனால் கலந்த E20 பெட்ரோல் மற்றும் எத்தனால் கலக்காத சாதாரண பெட்ரோல் ஆகியவற்றில் எதை பயன்படுத்த வேண்டும் என்பதை நுகர்வோரே தேர்வு செய்யும் வகையில் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், E20 எரிபொருளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்படாத வாகனங்களில் அதை கட்டாயப்படுத்தி பயன்படுத்தச் செய்வது குறித்து பொதுமக்களிடையே கடும் அதிருப்தி நிலவுவதாக தெரிவித்துள்ளார்.

மக்களின் கவலைகளுக்கு தீர்வு காணாமல், போராட்டங்களில் ஈடுபடுவோரை தேசவிரோதிகள் அல்லது சமூக ஆர்வலர்கள் என விமர்சிப்பது சரியான அணுகுமுறை அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசின் தற்போதைய முடிவை ஆதரிக்கும் வகையில் அறிவியல், பொறியியல் அல்லது பொருளாதார ரீதியில் போதுமான ஆதாரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றும், சிலரின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் மக்களிடையே இருப்பதாகவும் கூறியுள்ளார்.

2023-க்கு முன்பு தயாரிக்கப்பட்ட சுமார் 30 கோடி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் E20 பயன்பாட்டிற்கு வடிவமைக்கப்படவில்லை என்றும், அவற்றின் பயனர் கையேடுகளில் சாதாரண பெட்ரோல் அல்லது அதிகபட்சம் E10 பெட்ரோலை மட்டுமே பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

E20 பயன்படுத்துவதால் எரிபொருள் மைலேஜ் குறைதல், வாகன உதிரிப்பாகங்கள் விரைவில் சேதமடைவது, இன்ஜின் மற்றும் எரிபொருள் அமைப்புகளில் பாதிப்பு ஏற்படுவது போன்ற பிரச்சினைகள் குறித்து மக்கள் புகார் தெரிவித்து வருவதாகவும், இதனை பெட்ரோல் நிலையங்கள் மற்றும் சேவை மையங்களில் நேரில் சென்று பார்த்ததாகவும் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

எனவே, E20 பெட்ரோல் அல்லது சாதாரண பெட்ரோல் ஆகியவற்றில் எதை வேண்டுமானாலும் நுகர்வோர் தாங்களே தேர்வு செய்யும் வாய்ப்பை அரசு வழங்க வேண்டும் என்றும், E20 எரிபொருளின் குறைந்த கலோரி மதிப்பு மற்றும் குறைவான மைலேஜ் காரணமாக அதன் விலையையும் குறைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து விரிவாக விளக்க பிரதமரை நேரில் சந்திக்க அனுமதி வழங்குமாறும் அரவிந்த் கேஜ்ரிவால் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Previous Next

نموذج الاتصال