நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி இளைஞர் சபரிவர்மன் நீதிமன்றக் காவலில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும், இந்த மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து நீதி வழங்க வேண்டும் என்றும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில், காவல் துறையால் கைது செய்யப்பட்ட சபரிவர்மன், நீதிமன்றக் காவலில் இருந்தபோது உயிரிழந்தது கவலைக்குரிய சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டபோது நல்ல உடல்நலத்துடன் இருந்த சபரிவர்மன், பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக சிறையில் உயிரிழந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது. ஆனால், அவரது உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததாகவும், காவல் துறையினர் தாக்கியதால்தான் உயிரிழந்ததாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக உதயநிதி தெரிவித்துள்ளார்.
மேலும், காவல் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாநில அரசு இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சபரிவர்மனின் கடையில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக கூறி கைது செய்த காவல் துறையினர், ஈரோட்டில் குட்கா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட த.வெ.க. நிர்வாகி அருணை அதே நாளில் சொந்த ஜாமீனில் விடுவித்ததாகவும், இதனால் பொதுமக்களுக்கு ஒரு சட்டம், அரசியல் நிர்வாகிகளுக்கு வேறு சட்டம் என்ற நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த வழக்கில் தொடர்புடைய காவல் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, சபரிவர்மன் மரணத்துக்கு காரணமானவர்களுக்கு சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.