ஆகஸ்ட் 1-ல் நடைபெறும் இலக்கிய விழாவில் பங்கேற்கிறார்; 2007-க்கு பிறகு முதல் கொல்கத்தா வருகை

 

கொல்கத்தா: வங்கதேசத்தைச் சேர்ந்த சர்வதேச புகழ்பெற்ற எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு கொல்கத்தா வர உள்ளார். ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறும் இலக்கிய விழாவில் அவர் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'Secular Mission and Human Rights' மற்றும் 'Bangladesh Freedom Fighters Foundation (HRBFF)' ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இலக்கிய நிகழ்ச்சி, கொல்கத்தாவின் ரவீந்திர சதன் அரங்கில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை தஸ்லிமா நஸ்ரின் தனது ஃபேஸ்புக் பதிவின் மூலம் உறுதி செய்துள்ளார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான வழக்கறிஞர் உஸ்மான் மல்லிக், தஸ்லிமா நஸ்ரினின் வருகை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஆகஸ்ட் 2-ம் தேதி நடைபெறும் செய்தியாளர் சந்திப்பிலும் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்கள் உரிமை, மதச்சார்பின்மை மற்றும் மனித உரிமைகள் குறித்து துணிச்சலாக எழுதியதற்காக வங்கதேசத்தில் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்த தஸ்லிமா நஸ்ரின், 1994-ம் ஆண்டு நாடு கடத்தப்பட்டார். பின்னர் ஸ்வீடன் குடியுரிமை பெற்று ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் பல ஆண்டுகள் வசித்தார்.

இருப்பினும், வங்க மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சாரத்துடன் தனக்கு உள்ள ஆழமான பிணைப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த அவர், கொல்கத்தாவில் வாழ விருப்பம் இருப்பதாக பலமுறை தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர், மத்திய அரசு வழங்கிய புதுப்பிக்கக்கூடிய விசாவின் அடிப்படையில் 2004-ம் ஆண்டு கொல்கத்தாவில் குடியேறினார். அங்கு வசித்தபோது அவரது 'த்விகண்டிதோ' (Dwikhandito) நூல் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த நூலுக்கு விதிக்கப்பட்ட தடையை பின்னர் கொல்கத்தா உயர் நீதிமன்றம் நீக்கியது.

2007-ம் ஆண்டு அவரது எழுத்துகளுக்கு எதிராக ஏற்பட்ட போராட்டங்கள் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களால் அவர் கொல்கத்தாவில் இருந்து வெளியேற்றப்பட்டு, பின்னர் டெல்லி மற்றும் ஸ்வீடனில் தங்கினார். அதன் பிறகு மேற்கு வங்கத்திற்கு திரும்ப அனுமதி கிடைக்காத நிலையில், தற்போது சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் கொல்கத்தா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Next

نموذج الاتصال