சிறையிலேயே பாஜக கவுன்சிலர் பதவியேற்க அனுமதி: மக்கள் தீர்ப்பை நிராகரிக்க முடியாது - கேரள உயர் நீதிமன்றம்

 

திருவனந்தபுரம்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜக கவுன்சிலர் சுகதன், சிறையிலேயே மாநகராட்சி கவுன்சிலராக பதவியேற்கலாம் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற கேரள உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியது. புதிய கவுன்சிலர்கள் பதவியேற்றபோது, பாஜகவைச் சேர்ந்த 20 கவுன்சிலர்கள் உள்ளூர் தெய்வங்களின் பெயரில் உறுதிமொழி ஏற்றனர்.

இது சட்டப்படி செல்லாது எனத் தீர்ப்பளித்த கேரள உயர்நீதிமன்றம், அந்த 20 பேரும் மீண்டும் சட்டப்படி பதவியேற்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதன்படி 19 கவுன்சிலர்கள் மீண்டும் பதவியேற்ற நிலையில், 35-வது வார்டு கவுன்சிலர் சுகதன் மட்டும் பதவியேற்க முடியவில்லை. உள்ளூர் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக கடந்த ஜூன் மாதம் அவர் கைது செய்யப்பட்டு, கேரள சமூக விரோத தடுப்பு சட்டம் (KAAPA) கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, தொடர்ந்து மாநகராட்சி கூட்டங்களில் பங்கேற்காததால் சுகதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என இடதுசாரி கட்சிகளும், காங்கிரஸும் வலியுறுத்தி வந்தன.

இந்த சூழலில், சிறையிலேயே கவுன்சிலராக பதவியேற்க அனுமதி வழங்க வேண்டும் என்று சுகதன் தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி குன்னி கிருஷ்ணன், "பொதுமக்கள் வாக்களித்து சுகதனை தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை நிராகரிக்க முடியாது" என்று குறிப்பிட்டார்.

மேலும், திருச்சூரில் உள்ள விய்யூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகதன், ஜூலை 14 காலை 11 மணிக்கு சிறையிலேயே கவுன்சிலராக பதவியேற்கலாம் என்றும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அத்துடன், பதவியேற்பு நிகழ்வில் செய்தியாளர்கள் பங்கேற்கவும் அனுமதி வழங்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Previous Next

نموذج الاتصال