புகார் மீது நடவடிக்கை இல்லை: தலைமைச் செயலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

 

Chennai (Fort St. George), Tamil Nadu

சென்னை தலைமைச் செயலகம் முன்பு, புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற விரக்தியில் திண்டிவனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி (32), நேற்று காலை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனு அளிக்க வந்திருந்தார்.

தலைமைச் செயலக நுழைவாயிலில் பாதுகாப்பு சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அவர் திடீரென தனது தலை மற்றும் உடலில் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அதை கவனித்த பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று அவரை தடுத்து நிறுத்தினர். அவரிடமிருந்த டீசல் கேன் பறிமுதல் செய்யப்பட்டதுடன், பாதுகாப்பு நடவடிக்கையாக தண்ணீர் ஊற்றி பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர், தற்கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் அவரை கைது செய்த போலீஸார், கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், சாமுண்டீஸ்வரி ஏற்கனவே தனது தனிப்பட்ட பிரச்சினை தொடர்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் மனு அளித்திருந்ததாகவும், அந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் ஏற்பட்ட விரக்தி மற்றும் மன உளைச்சல் காரணமாக இந்த முயற்சியில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous Next

نموذج الاتصال